கனேடிய வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை!
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கனடா தனது வான்வெளியில் நுழைய ரஷ்ய விமானங்களுக்கு உடனடியாக தடை விதிப்பதாக போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா தெரிவித்துள்ளார்.
பல ஐரோப்பிய நாடுகளும் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஜேர்மனி, பிரித்தானியா, இத்தாலி, பால்டிக் நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கு மேலே உள்ள வான்வெளியில் இருந்து ரஷ்யாவிற்கு சொந்தமான விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், ரஷ்யாவின் முதன்மையான கேரியர் ஏரோஃப்ளோட் (Aeroflot) ஒரு நாளைக்கு பல விமானங்களை கனேடிய வான்வெளி வழியாக அமெரிக்காவிற்கும் அதற்கு அப்பாலும் இயக்குகிறது.
இதனிடையே, ரஷ்யா பதிலடி கொடுக்கும் விதமாக பிரித்தானியா, போலந்து, பல்கேரியா மற்றும் செக் குடியரசில் இருந்து வணிக விமானங்களை தடை செய்துள்ளது.
ரஷ்யாவின் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக உக்ரைனுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக, மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஜேர்மனியும் ரஷ்ய விமானங்களுக்கு அதன் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.