எதிர்பார்த்தது நடந்தேவிட்டது: சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதித்தது கனடா
கனடாவில் கடுமையான வீடுகள் பற்றாக்குறை நிலவுவதால், அதற்கு வெளிநாட்டவர்கள், குறிப்பாக சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் கனடாவுக்கு வருவதும் ஒரு காரணம் என கனடா அரசு மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தது.
எதிர்பார்த்ததுபோலவே நடந்துவிட்டது
ஏற்கனவே, கனடா இந்திய தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விடயத்தைச் செய்துள்ளது கனடா அரசு.
REUTERS
கனடாவில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைக்கு சர்வதேச மாணவர்கள் காரணம் என்றும், ஆகவே, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என்றும் கனேடிய வீட்டு வசதித்துறை அமைச்சரும், புலம்பெயர்தல் துறை அமைச்சரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
விடயம் என்னவென்றால், கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் பெரும்பான்மை இந்திய மாணவர்கள்தான்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு
இந்நிலையில், எதிர்பார்த்ததுபோலவே, கனடாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு கனடா கட்டுப்பாடு விதித்துள்ளது.
நேற்று இந்த தகவலை வெளியிட்ட புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், கனடாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, 35 சதவிகிதம் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும். அதாவது, இந்த ஆண்டு, அதாவது 2024 செப்டம்பரில் கல்லூரிகளில் செமஸ்டர் துவங்க உள்ள நிலையில், முன்னிருந்ததைவிட 35 சதவிகித மாணவர்களே கனடாவில் கல்வி கற்க வர அனுமதிக்கப்படுவார்கள். 2025இலும் இதே நிலை நீடிக்கும்.
என்ன பாதிப்பு?
இப்படி மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் கனடாவின் பொருளாதாரத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பது அனைவரும் அறிந்த விடயம்.
அதே நேரத்தில், மாணவர்களுக்கும் அது இழப்புதான். ஏனென்றால், 2023இல் 900,000 மாணவர்களுக்கு கல்வி அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 360,000 கல்வி அனுமதிகள் மட்டுமே வழங்கப்படும்.
ஆனால், ஏற்கனவே கனடாவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களை இந்த கட்டுப்பாடு பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |