கனடா தாக்குதல்: இரண்டாவது தாக்குதல்தாரியும் உயிரிழப்பு... பொலிசாருக்கு ஏமாற்றம்
கனடாவில் சகோதரர்கள் இருவர் கத்தியால் தாக்கியதில் 10 பேர் கொல்லப்பட்டார்கள்.
தாக்குதல்தாரிகளில் இரண்டாவது நபரும் நேற்று உயிரிழந்துவிட்டார்.
கனடாவில் 10 பேர் உயிரிழக்கவும், 18 பேர் காயமடையவும் காரணமாக இருந்த சகோதரர்களில் இரண்டாவது நபரும் சிக்கிய விடயம் பெரும் நிம்மதியை ஏற்படுத்திய நிலையில், பொலிசாருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் ஒரு விடயம் நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, Saskatchewanஇல் டேமியன் சாண்டர்சன் (Damien Sanderson, 31) மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் (Myles Sanderson, 30) என்னும் சகோதரர்கள் இருவர் கத்தியால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினார்கள். அதில் 10 பேர் கொல்லப்பட்டார்கள், 18 பேர் வரை காயமடைந்தார்கள். இந்த சம்பவம் கனடா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிய நிலையில், திங்கட்கிழமையன்று டேமியன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரை அவரது சகோதரரே குத்திக்கொன்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
தலைமறைவான மைல்ஸ், ஒரு பெண்ணும் அவரது மகனும் வாழும் வீடு ஒன்றிற்குள் புகுந்து அவர்களுடைய ட்ரக்கை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்.
பொலிசார் அவரைத் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று மதியம் 3.30 மணியளவில் Rosthern என்ற இடத்தின் அருகில் பொலிசாரிடம் சிக்கியிருக்கிறார் மைல்ஸ். ஆனால், அவரது உடலிலும் பலத்த காயங்கள் காணப்பட்டிருக்கின்றன. அவரது நிலைமை மோசமடைந்ததால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஒருவர் கத்தியுடன் சுற்றித் திரிகிறார், மக்கள் அவருக்கு வீட்டில் இடம் கொடுக்கவோ, அவரை நெருங்கவோ வேண்டாம் என பொலிசார் எச்சரித்திருந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளார்கள். பொலிசார் விடுத்த எச்சரிக்கையும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், பொலிசாருக்கு மைல்ஸின் மரணம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரணம், இதேபோல பொதுமக்கள் மீது முன்னரும் தாக்குதல்கல் நடத்தப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் தாக்குதல்தாரிகள் சிக்கியுள்ளார்கள், அவர்கள் கொலை செய்ததற்கான நோக்கம் தெரியவந்தது.
Saskatchewan RCMP/The Canadian Press
உதாரணமாக, இலங்கைப் பெண் ரேணுகா அமரசிங்கா உட்பட 10 பேரை வேன் மோதி கொன்ற அலெக் மின்னேசியன் என்பவனை நினைவிருக்கலாம். அவன் தனக்கு காதலிக்கவும், பாலுறவு கொள்ளவும் பெண்கள் கிடைக்காத ஆத்திரத்தில் கொடூர குற்றச்செயலில் ஈட்பட்டான்.
ஆனால், இந்த சாண்டர்சன் சகோதரர்கள் எதற்காக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது தெரியாத நிலையில், டேமியன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இப்போது மைல்ஸும் உயிரிழந்துவிட்டதால், அவர்கள் எதற்காக தாக்குதல் நடத்தினார்கள் என்பது தெரியாமலே போய்விட்டதால் பொலிசாருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
Dan Zakreski/CBC