எபோலா பரவல்- கனடா விதித்த தற்காலிக நுழைவுத் தடை
காங்கோவில் எபோலா நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கனடா அரசு புதிய தற்காலிக எல்லை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்த எந்த வெளிநாட்டவரும் கனடாவிற்குள் நுழைய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசனையை மீறுகிறது. WHO, பயணத் தடைகள் மற்றும் வர்த்தகத் தடைகள் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் பயனில்லை என்றும், அவை தேவையற்ற அவநம்பிக்கையும், பாகுபாடுகளையும் உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
WHO மதிப்பீட்டின்படி, காங்கோவில் ஏற்பட்டுள்ள எபோலா பரவல் சர்வதேச அளவில் பரவும் அபாயம் குறைவாகவே உள்ளது.

ஜூலை 15 நிலவரப்படி, காங்கோவில் 2,100 க்கும் மேற்பட்ட எபோலா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் 828 பேர் உயிரிழந்துள்ளனர். எபோலா நோய் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது.
கனடாவின் பொது சுகாதார நிறுவனம், “காங்கோவில் இருந்த வெளிநாட்டவர்களின் நுழைவை 21 நாட்களுக்கு தடை செய்வது, கனடியர்களின் சுகாதார அபாயத்தை குறைக்கும்” என்று தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 20 இரவு 11:59 மணி முதல் அமுலுக்கு வரும்.
இந்த விதிகளை மீறுவோருக்கு 150,000 கனேடிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படலாம். நிறுவனங்களுக்கு 1.5 மில்லியன் டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவில், காங்கோவில் இருந்தவர்கள் 21 நாட்கள் வரையிலும் விமானம் மூலம் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் (ECDC) பயணத் தடைகள் மனிதாபிமான உதவிகளை பாதிக்கும் என்றும், அவை குறைந்த பயனுடையவை என்றும் எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |