கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியாவில் இந்தாண்டு சட்டவிரோத போதைப்பொருளால் 1500 பேர் பலி! அதிர்ச்சி புள்ளிவிவரம்
கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியாவில் இந்தாண்டு மட்டும் இதுவரை சட்டவிரோத போதைப்பொருள் பயன்படுத்தியதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டியுள்ளது.
இந்த தகவலை உடற்கூராய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மட்டும் 330 பேர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டால் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இது கடந்தாண்டு இறப்புகளை விட 20 சதவீதம் அதிகமாகும். எதிர்காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் மற்றும் தடுக்கும் முயற்சியில், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சிறிய அளவிலான சட்டவிரோத போதைப் பொருட்களை வைத்திருப்பதை குற்றமற்றதாக மாற்றுவதற்கு அரசுக்கு விண்ணப்பிக்கப்படும் என்று மாகாண அரசாங்கம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.
நேற்று இது தொடர்பாக பிரிட்டீஷ் கொலம்பியாவின் Mental Health and Addictions அமைச்சர்Sheila Malcolmson கூறுகையில், போதை மருந்துகளால் சமீபத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் மனதை உலுக்குகிறது என கூறியுள்ளார்.
மாகாணத்தில் புதிய சிகிச்சை மற்றும் மீட்பு சேவைகள் பற்றிய அறிவிப்பை அமைச்சர் வெளியிடவுள்ள நிலையில் சமீபத்திய புள்ளிவிபரங்கள் குறித்தும் பேசுவார் என தெரியவந்துள்ளது.