ரஷ்யர்கள் பயணித்த விமானத்தை சிறைப்பிடித்த கனடா: என்ன தண்டனை தெரியுமா?
ரஷ்ய நாட்டவர்கள் இருவர் பயணித்த விமானம் ஒன்றை சிறைப்பிடித்த கனடா போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அந்த விமானம் தடையை மீறியதாக தெரிவித்துள்ளார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல தடைகள் குறித்து அறிவித்த கனடா, பிப்ரவரி 24 முதல் தனது வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில், மார்ச் 1 அன்று, கனேடிய வான்வெளியில் பறந்த விமானம் ஒன்றில் ரஷ்ய நாட்டவர்கள் இருவர் பயணிப்பது தெரியவந்ததையடுத்து, அந்த விமானம் Yellowknife நகர விமான நிலையத்தில் சிறைப்பிடித்துவைக்கப்பட்டது.
ரஷ்ய விமானங்கள் கனேடிய வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட விமானம் அந்த தடையை மீறியுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினார்கள்.
இந்நிலையில், அந்த விமானம் வான்வெளிக் கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக கனடா போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, அந்த ரஷ்யர்கள் மற்றும் அந்த விமானத்தின் விமானிகள் இருவர் ஆகியோருக்கு, தலா 3,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் ரஷ்யர்களுக்குச் சொந்தமானதோ, அல்லது ரஷ்யர்களால் இயக்கப்படதோ அல்ல. அது, ஜெனீவாவை மையமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமானது.
என்றாலும், வான்வெளிக் கட்டுப்பாடுகளை மீறியதால், அந்த விமான நிறுவன உரிமையாளருக்கும் 15,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் கனடாவிலிருந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கனேடிய போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ஆனால், அதில் பயணித்த பயணிகள் இல்லாமல்தான் அது செல்லமுடியும் என்று கூறிவிட்டார்கள்.