நாடுகடத்தப்படுவதை தடுக்க கோரி இந்தியர் விடுத்த கோரிக்கை: நீதிபதியின் முக்கிய தீர்ப்பு
கனடாவில், விபத்து ஒன்றை ஏற்படுத்தி 16 பேர் உயிரிழக்க காரணமான இந்தியர் ஒருவர் தன்னை நாடுகடத்துவதை தடுக்கக் கோரி அளித்த விண்னப்பத்தை நீதிபதி ஒருவர் நிராகரித்துவிட்டார்.
16 பேர் உயிரிழக்க காரணமான விபத்து
நிரந்தர கனேடிய வாழிட உரிமம் பெற்று கால்கரியில் வாழ்ந்துவந்த Jaskirat Singh Sidhu (33)க்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், Saskatchewan பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த Sidhuவின் ட்ரக், ஜூனியர் ஹாக்கி அணியின் வீரர்கள் மற்றும் அலுவலர்களை சுமந்து வந்த பேருந்து ஒன்றின்மீது மோதியது.
இந்த கோர விபத்தில், 16 பேர் கொல்லப்பட்டார்கள், 13 பேர் காயமடைந்தார்கள். அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததாக Sidhu மீது குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி Sidhuவை நாடுகடத்த பரிந்துரைத்தது.
Kayle Neis/The Canadian Press
கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி
தன்னை நாடுகடத்துவதை தடுக்கக் கோரி Sidhu நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்திருந்தார். அவர் இதற்கு முன் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்பதை கருத்தில்கொண்டு அவரை நாடுகடத்தவேண்டாம் என Sidhuவின் சட்டத்தரணி வாதிட்டார்.
ஆனால், இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கினாலும், அது நடந்த துயர சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று கூறிய நீதிபதி, Sidhuவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்த Logan (21), Jaxon (20) ஆகிய இளைஞர்களின் பெற்றோர், தங்கள் வாழ்வில் மீண்டும் Sidhuவைப் பார்க்க விரும்பவில்லை என்றும், ஆகவே அவரை நாடுகடத்தவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால், அதே விபத்தில் உயிரிழந்த Evan Thomas (18) என்னும் இளைஞரின் தந்தையோ, Sidhuவை தாங்கள் மன்னித்துவிட்டதாகவும், அவர் கனடாவில் வாழ்வதில் தங்களுக்கு பிரச்சினை எதுவுமில்லை என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே அவர் தன்னால் ஏற்பட்ட விபத்தின் பாதிப்புகளை வாழ்நாளெல்லாம் சுமந்துகொண்டுதான் வாழப்போகிறார். அப்படியிருக்கும்போது அவர் கனடாவில் இருந்தால் என்ன, இந்தியாவில் இருந்தால் என்ன என்று Evanஇன் தந்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.