முதல் ஹன்டா வைரஸ் பாதிப்பை உறுதி செய்துள்ள கனடா
ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் பயணம் செய்த கனேடியர்கள் நால்வரில் ஒருவருக்கு தற்போது ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நான்கு கனேடியர்கள்
ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் பயணித்தபோது ஹன்டா வைரஸ் தொற்றுக்கு ஆளான நான்கு கனேடியர்கள், தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கே தற்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவிக்கையில்,
சம்பந்தப்பட்ட நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட லேசான அறிகுறிகளை வெளிப்படுத்திய நிலையில், அவரும், அவருடன் இணைந்து தனிமைப்படுத்தலில் இருந்த அதே உல்லாசக் கப்பலில் பயணித்திருந்த அவரது துணையும், பரிசோதனை மற்றும் மருத்துவ மதிப்பீட்டிற்காக விக்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு லேசான அறிகுறிகலுடன் காணப்பட்ட நிலையில், மருத்துவ சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹென்றி கூறியுள்ளார்.
டச்சு உல்லாசக் கப்பல்
மேலும், அந்த நபரின் துணையும் மருத்துவமனையில் நீடிக்கிறார் என்றும், அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை எனவும் ஹென்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனிமைப்படுத்தலில் இருந்த மூன்றாவது நபரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, கண்காணிக்கப்படுவதாகவும், நான்காவது நபர் குடியிருப்பிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹென்றி தெரிவித்துள்ளார்.

ஹன்டா வைரஸ் பரவல் ஏற்பட்ட, எம்வி ஹோண்டியஸ் என்ற டச்சு உல்லாசக் கப்பலில் இந்த நான்கு கனடியர்களும் பயணித்தனர். மே 10 ஆம் திகதி இவர்கள் விக்டோரியாவில் வந்தடைந்தனர்.
சம்பவத்தன்று முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் நால்வருக்கும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றே ஹென்றி பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து குறைந்தபட்சம் 21 நாட்கள் தனிமைப்படுத்தலைத் தொடங்குவதற்காக அவர்கள் நேரடியாகத் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர். எம்வி ஹோண்டியஸ் கப்பலில் பயணித்த மூவர், வைரஸ் பாதிப்பால் கப்பலிலேயே மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |