உலகளவில் அதிர்வலையை கிளப்பிய உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்! கனேடிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உக்ரேனிய விமானம் சுடப்பட்டு விழுந்து நொறுங்கிய வழக்கில் பாதிக்கப்பட்ட 6 பேரின் குடும்பத்திற்கு 107 மில்லியன் கனேடிய டொலர்களை இழப்பீடாக வழங்க கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஈரான் தலைநகரில் இருந்து உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பி.எஸ் 752 (PS752) புறப்பட்டது. உக்ரைனுக்கு கிளம்பிய அந்த விமானம் இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.
அப்போது, இந்த விமானத்தை அமெரிக்காவின் ஏவுகணை என்று தவறாக கருதியதாக ஈரான் கூறியது. இந்த சம்பவத்தில், விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர், இந்த நிகழ்வு உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா , கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறின.
மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது இரான்; இந்நிலையில் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் அடுத்த சில நாட்களில் ஒப்புக்கொண்டது.
உயிரிழந்தவர்களில் 55 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள்; மேலும் 35 பேர் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள். சம்பவத்தில் மாண்ட 6 பேரின் குடும்பத்தினர் ஈரானுக்கு எதிராக நீதிமன்ற வழக்குத் தொடுத்திருந்தனர்.
ஈரானும் ஏனைய அதிகாரிகளும் அந்தச் சம்பவத்திற்குக் காரணம் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு கனடாவின் ஒன்றாறியோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குறித்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு 107 மில்லியன் கனடா டொலர்களை இழப்பீடாக ஈரான் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரானிடம் இருந்து எப்படி இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படும் என்று உடனடியாக தெரியவில்லை. இதனிடையில் இந்த முடிவினால் ஈரானுக்கும் கனடாவுக்கும் இடையே உள்ள பதற்றம் மோசமடையக்கூடும் என்று கூறப்படுகிறது.