அமெரிக்காவில் பிரபலமடைந்து வரும் ஒரு குழுவை தீவிரவாதிகள் அமைப்பு என அறிவித்த கனடா
அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகைக்கு காரணமான வலதுசாரி கடும்போக்கு குழுவினரை கனடா அரசாங்கம் தீவிரவாத அமைப்பு என்று அறிவித்துள்ளது.
கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயக கட்சி முன்னெடுத்த நடவடிக்கையின் பலனாக, Proud Boys என அழைக்கப்படும் அந்த குழுவினரை கனடா அரசாங்கம் தீவிரவாதிகள் அமைப்பு என அறிவித்துள்ளது.
மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2016-ல் துவங்கப்பட்ட தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட Proud Boys குழுவினரை தீவிரவாத அமைப்பு என முதல் நாடாக கனடா அறிவித்துள்ளது.
ஜனவரி 6 ம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகையில் தொடர்புடைய இந்த குழுவினர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் என்றே தெரிய வந்துள்ளது.
ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், Proud Boys மற்றும் அவர்களது உறுப்பினர்கள் தங்கள் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் என்று நம்புபவர்களுக்கு எதிராக வன்முறைத் திட்டங்களைத் திட்டமிட்டு மேற்கொண்டனர், மேலும் அவர்கள் அத்தகைய நடவடிக்கையை வெளிப்படையாக ஊக்குவித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் உறுப்பினர்கள் அனைவரும் தவறான கருத்துகளை பரப்புவதிலும், இஸ்லாமிய எதிர்ப்பு, யூத எதிர்ப்பு, இனவெறி கருத்துக்கள் மற்றும் வெள்ளையர்கள் ஆதரவு கருத்தியல் ஆகியவற்றைக் கொண்டவர்கள் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கனடாவின் இந்த துரித நடவடிக்கை என்பது Proud Boys குழுவின் சொத்துக்கள் முடக்கப்படும் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்கு மேலும் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதாகும்.
இருப்பினும், Proud Boys குழுவில் உறுப்பினர்கள் என்பதால் எவர் மீதும் நடவடிக்கை பாயாது எனவும்,
ஆனால் ஒரு Proud Boys உறுப்பினர் வன்முறைச் செயல்களில் பங்கேற்றால் பயங்கரவாத குற்றங்களுக்கான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கப்படும் எனவும் கனேடிய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.