கனடாவில் பல் மருத்துவ திட்டம் உத்தியோகப்பூர்வமாக தொடக்கம்: யார் யாருக்கு தகுதி
கனடாவின் பல் மருத்துவ திட்டத்தின் முதல் கட்டம் புதன்கிழமை நாடு முழுவதும் உத்தியோகப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
திருப்புமுனையாக அமையும்
முதற்கட்டமான 1.9 மில்லியன் முதியவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். எஞ்சியவர்கள் இந்த திட்டத்தில் இணைய சிறிது காத்திருக்க நேரிடும். மே 1ம் திகதி முதல் 70 வயது கடந்தவர்கள் அல்லது தகுதியுடைய 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
துவங்கப்பட்டுள்ள இந்த பல் மருத்துவ திட்டமானது கனேடியர்களுக்கு திருப்புமுனையாக அமையும் என அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்துள்ளார். இந்த திட்டமானது பல கட்டமாக அமுலுக்கு கொண்டுவர உள்ளனர்.
புதன்கிழமை மட்டும் 1,200க்கும் மேற்பட்ட முதியவர்கள் பல மருத்துவர்களை நாடியுள்ளதாகவும், புதிய திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் Terry Beech தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவு செய்துள்ள முதியவர்களில் முதல் 1 மில்லியன் பேர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
காத்திருக்க நேரிடும்
இந்த திட்டத்தில் இணைய, கனேடிய குடிமக்களாக இருத்தல் அவசியம், பல் தொடர்பான எந்த ஒரு காப்பீட்டு திட்டத்திலும் இணைந்திருக்க கூடாது. குடும்ப ஆண்டு வருவாய் என்பது 90,000 டொலருக்கும் குறைவாக இருத்தல் வேண்டும். 2023 ஆம் ஆண்டுக்கான வருமான வரி சமர்ப்பித்திருக்க வேண்டும்.
தற்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளும், அத்துடன் செல்லுபடியாகும் ஊனமுற்றோர் சான்றிதழ் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆனால் 18 வயது முதல் 64 வயதுடைய தகுதியுள்ளவர்கள் 2025 தொடக்கம் வரையில் காத்திருக்க நேரிடும். பல் மருத்துவ திட்டத்தில் விண்ணப்பிக்க, சமூக காப்பீட்டு இலக்கம், பிறந்த திகதி, முழுமையான பெயர், குடியிருப்பு மற்றும் அஞ்சல் முகவரி, பல் மருத்துவம் தொடர்பில் அரசின் சமூக திட்டங்களில் இணைந்திருந்தால் அது தொடர்பிலும் குறிப்பிட வேண்டும்.
9 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த சேவையை அளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |