கனடா- அமெரிக்கா இடையிலான போக்குவரத்து தடை மீண்டும் நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவுடனான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளது கனடா அரசு.
கனடா மற்றும் அமெரிக்கா இடையில் 2020 மார்ச் 21-ஆம் திகதி விதிக்கப்பட்ட நில எல்லை கட்டுப்பாடுகள் தற்போது மே 21-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு, தற்போது 13-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது மே 21-ஆம் திகதி இரவு 11.59 மணிவரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் வணிகம், அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதி & இறக்குமதி, மருத்துவ உதவிகள் என அத்தியாவசிய பயணங்கள் மட்டும் எப்போதும் போல அனுமதிக்கப்படும்.
கனடாவுக்கு வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை என்றாலும், அமெரிக்கா உட்பட வெளிநாடுகளிலிருந்து கனடா வரும் கனேடிய குடிமக்கள் அனுமதிக்கப்படுகினறனர்.
ஆனால், அவர்கள் நாட்டிற்குள் நுழைந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதற்கிடையில் இருமுறை கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இனி வரும் நாட்களில் அமெரிக்க-கனடா நில எல்லைகள் திறக்கப்படும்போது, தடுப்பூசி கடவுச்சீட்டை (Vaccine Passport) பயன்படுத்துவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.