ஆயுத மோதல் வெடிக்கும் என கனடா அஞ்சுகிறது! ஜஸ்டின் ட்ரூடோ
உக்ரைனில் ஆயுத மோதல் வெடிக்கும் என கனடா அஞ்சுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மிகக் குறுகிய அறிவிப்பில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் கருத்தை எதிரொலிக்கும் விதமாக, உக்ரைனில் ஆயுத மோதல் வெடிக்கும் என கனடா அஞ்சுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ஆயுத மோதல் வெடிக்கும் என நாங்களும் அஞ்சுகிறோம். ரஷ்ய அதன் இராணுவ படைகளை உக்ரைனின் எல்லைக்கு அனுப்பி வருகிறது.
எனவே ரஷ்ய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்.
ரஷ்ய ஆக்கிரமிப்பு மற்றும் உக்ரைனுக்குள் மேலும் ஊடுருவல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை மிக மிகத் தெளிவாக வெளிப்படுத்த எங்கள் சர்வதேச நட்பு நாடுகள் மற்றும் சக அதிகாரிகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நாங்கள் வெளியுறவுத்துறை நடவடிக்கைகளுடன் , பொருளாதாரத் தடைகளுடன், சர்வதேச அரங்கில் முழு பலத்துடன் நிற்கிறோம்.
நேட்டோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக லாட்வியாவில் கனடா படைகள் இருக்கின்றன.
நேட்டோ அதன் கிழக்குப் பகுதியைப் பாதுகாக்கச் செய்யும் முக்கியமான பணிகளை கனடா படையினர் தொடர்வார்கள் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.