எங்கு பார்த்தாலும் கனடா கொடி... தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்களால் மாறியுள்ள மக்கள் மன நிலை
சாதாரணமாகவே Ottawaவில் அதிகமாக கனேடிய கொடிகள் பறப்பதைக் காணமுடியும்...
பெடரல் கட்டிடங்களின் உச்சியிலும், நாடாளுமன்றத்திலும் கொடியைக் காணும்போது மக்களுக்கு ஏற்படும் உணர்வே தனி!
ஆனால், கட்டாய தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்களால் அந்த மன நிலைமை மாறியுள்ளது. இப்போதெல்லாம் கனேடிய கொடியுடன் யாரையாவது பார்த்தாலே சட்டென ஒரு எச்சரிக்கை உணர்வுதான் ஏற்படுகிறது என்கிறார் கனேடிய குடிமகன் ஒருவர்.
கனேடிய கொடியைப் பார்த்ததும், ஒரு கணம் கனேடியராக இருப்பதைக் குறித்த ஒரு தர்மசங்கடமான உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை என்கிறார் அவர்.
ஆக, இந்த தொடர் போராட்டங்களுக்குப் பிறகு கனேடிய கொடி பதற்றத்தை உருவாக்கும் ஒரு விடயமாக ஆகிவிட்டிருக்கிறது.
போராட்டங்கள் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போராட்டங்களை எதிர்க்கும் கனேடிய குடிமக்கள் சிலர், போராட்டக்காரர்கள் தங்கள் வாகனங்களிலிருந்து கொடியை அகற்றவேண்டும் என கோரியுள்ளார்கள்.
அமெரிக்காவில்தான் எந்தப் போராட்டம் நடந்தாலும் மக்கள் உடனே தங்கள் நாட்டுக் கொடியைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். இப்போது கனடாவிலும் அதேபோல் ஆகிவிட்டது.
கடந்த ஆண்டைப் பொருத்தவரை கொடிகள் முக்கியமான ஒரு விடயத்தை நினைவுகூருவதற்காக பயன்படுத்தப்பட்டன. ஆம், உண்டுறை பள்ளிகளில் உயிரிழந்த பூர்வக்குடியின குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் கனேடிய கொடி பெடரல் கட்டிடங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அப்போது அது உருவாக்கிய உணர்வு வேறு...
இப்போது, இந்த கட்டாய தடுப்பூசி எதிர்ப்பாளர்களால் கனேடிய கொடியின் பயன்பாடு மக்களுக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.