கனடாவில் எழுந்துள்ள புதிய சிக்கல்! பணிநீக்கம் செய்யப்படும் சுகாதார ஊழியர்கள்; கேள்விக்குறியான மக்களின் ஆரோக்கியம்!
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடு நெருங்கும் நிலையில், கனடாவின் சுகாதாரத் துறை இப்போது ஊழியர் பற்றாக்குறை மற்றும் பணிநீக்கங்களை எதிர்கொள்கிறது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வாரம் கடுமையான தடுப்பூசி ஆணை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தடுப்பூசி போடப்படாத சுகாதார ஊழியர்கள் ஊதியமற்ற விடுப்பில் அனுப்பப்படுவார் என்று கூறினார்.
மேலும், விமானம், ரயில் மற்றும் கப்பல் பயணிகளுக்கு கோவிட் -19 ஷாட்களை கட்டாயமாக்கினார்.
இருப்பினும், நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் பலர் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என்பதால் ஏற்கனவே பல மருத்துவமனைகளில் பணிநீக்கங்கள் தொடங்கியுள்ளன.
கடந்த வாரம் தெற்கு ஒன்ராறியோவில் உள்ள ஒரு மருத்துவமனை 57 ஊழியர்களை வெளியேற்றியது.
டொராண்டோவில் உள்ள ஒரு நீண்டகால பராமரிப்பு இல்லம் ஒன்று, தடுப்பூசி போட மறுத்த 36 சதவீத ஊழியர்களை ஊதியமில்லா விடுப்பில் அனுப்பியது.
அதேபோல், கியூபெக் மாகாணத்தில் அக்டோபர் 15-ஆம் திகதிக்கு முன்பாக இன்னும் முழுமையாக தடுப்பூசி போடப்படாத சுமார் 25,000 சுகாதாரப் பணியாளர்கள் ஊதியம் இல்லாமல் இடைநீக்கம் செய்ய வேண்டியிருக்கும் என்று மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே கூறினார்.
இந்நிலையில், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் இந்த கடுமையான நிலைப்பாடுகளை மென்மையாக்க மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களை வலியுறுத்தி வருகிறது.
இதுபோன்று பணிநீக்கங்களும், இடைநீக்கங்களு தொடர்ந்தால், மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில், தொழிலாளர்களின் பற்றாக்குறையானது, அதிகப்படியான சுமை கொண்ட பணியாளர்களைக் கஷ்டப்படுத்தும்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றுநோயை கையாளுகின்ற அவர்களுக்கு பணிச்சுமை பல மடங்கு அதிகரிக்கும்.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார உதவி பேராசிரியர் டெவன் கிரேசன் (Devon Greyson), இது குறித்து பேசுகையில், "தொழிலாளர்கள் இந்த சூழலுக்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை" என்று கூறினார்.
மேலும்"தொழிலாளர்களின் பற்றாக்குறை என்பது மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் பிரதிபலிக்கலாம். இது பயத்தை அளிக்கிறது" என்று கிரேசன் கூறினார்.
அதேசமயம் "நாங்கள் ஒரு நெறிமுறை சூழ்நிலையில் இருக்கிறோம், அங்கு அனைத்து சுகாதார பணியாளர்களும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யாமல் இருப்பதும் பயமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.