அமெரிக்க எல்லைகளில் கொரோனா சோதனையை தொடங்கும் கனடா; விதிகளை மீறினால் 750,000 டொலர் அபராதம்!
புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்க எல்லைகளில் COVID-19 ஸ்வாப் சோதனைகளை கனடா இன்று முதல் தொடங்குகிறது.
கனடாவின் Public Health Agency 117-க்கும் மேற்பட்ட அமெரிக்க-கனடா நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு on-site swab சோதனைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், பயணத்திற்கு முன்னும் பின்னும் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை அறிவித்தது.
கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட எதிர்மறை COVID-19 PCR சோதனை முடிவுகளுக்கு விலக்கு அளித்து, அமெரிக்க நுழைவுத் துறைமுகத்தில் COVID-19 சோதனையை நிர்வகிப்பதாக கனடா அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, இன்று முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. COVID-19 சோதனைகள் PHAC அதிகாரிகள் மற்றும் கனேடிய செஞ்சிலுவை சங்க ஊழியர்களால் நிர்வகிக்கப்படவுள்ளது.
புதிய விதிகளின்படி, ஸ்வாப் சோதனையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். பின்னர் 10-ஆம் நாளில் இரண்டாவது சோதனை எடுக்க வேண்டும்.
கனேடிய அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி, எல்லையில் கொரோனா சோதனை விதிமுறைகளை மீறினால், அது தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு கிரிமினல் குற்றமாகும். அதற்கு தண்டனையாக ஒருவருக்கு 6 மாத சிறை அல்லது 750,000 டொலர் அபராதம் விதிக்கப்படும், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.