இந்தியா கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய என்னால் முடியும்: கூறும் கனேடிய அரசியல்வாதி
கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர், இந்தியா கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய, தன்னால் முடியும் என்று கூறியுள்ளார்.
கனடா இந்திய உறவில் விரிசல்
ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய என்னால் முடியும்
இந்நிலையில், இந்தியா கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய தன்னால் முடியும் என்று கூறியுள்ளார், கனேடிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான Pierre Poilievre.
கனடாவில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே பேசிய Pierre Poilievre, கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கெதிரான வெறுப்பையும், இந்துக்களுக்கெதிரான வெறுப்பையும் வன்மையாக கண்டித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவை ட்ரூடோ கெடுத்துவிட்டதாக குற்றச்சாட்டு
தான் கனேடிய பிரதமரானால் இந்தியா கனடாவுக்கிடையிலான உறவைத் தன்னால் சரி செய்யமுடியும் என்று கூறிய Pierre Poilievreஇடம், இந்தியா 41 கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளது குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் கனேடியர்களை ஒருவருக்கொருவர் எதிராக திருப்பிவிட்டுவிட்டதாகவும், வெளிநாட்டினருடனான உறவுகளையும் கெடுத்துவிட்டதாகவும், அதனால் இந்தியா உட்பட பெரும்பாலான உலக நாடுகளுடன் கனடாவுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |