கட்டுப்பாடுகளை கடுமையாக்க கனடா திட்டம்! கசிந்த முக்கிய தகவல்
கனடாவில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதன்கிழமை அறிவிக்கப்படும் புதிய நடவடிக்கைகளுடன் சர்வதேச பயணத்திற்கான கட்டுப்பாடுகளை கனடா கடுமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா உட்பட கனடாவுக்கு வரும் அனைத்து அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தடை உட்பட சாத்தியமான நடவடிக்கைகளை அமுல்படுத்த கனடா அரசு திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மாகாண தலைவர்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடலின் போது இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று சிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளில் கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் நாடு திரும்பும் கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை ஆகியவை அடங்கும் என சிபிசி நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள 10 நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் நாட்டிற்கு நுழைய கனடா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.