சந்தேகத்துக்குரிய பெட்டியால் தடுத்து நிறுத்தப்பட்ட கனேடியர்: ஒரு சுவாரஸ்ய செய்தி
கனடாவின் ஹாலிஃபாக்ஸிலிருந்து வின்னிபெக் நோக்கிப் புறப்பட்ட கனேடியர் ஒருவர் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அதற்குக் காரணம், அவர் பையிலிருந்த சிறிய மரப்பெட்டி!
தடுத்து நிறுத்தப்பட்ட கனேடியர்
ஹாலிஃபாக்ஸிலிருந்து வின்னிபெக் நோக்கிப் புறப்பட்ட வின்சென்ட் (Vincent Masse) என்பவரது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் CT Xரே ஸ்கேனர் வழியாக அனுப்ப, அவரது பையிலிருந்த சிறிய பெட்டி ஒன்றை அனுமதிக்க மறுத்துள்ளது ஸ்கேனர்.

ஆகவே, அது என்ன என அதிகாரிகள் விசாரிக்க, அது தனது செல்லப்பிராணியான நாயின் சாம்பல் என்று கூறியுள்ளார் வின்சென்ட்.
அதாவது, தன் செல்லப்பிராணி மீது அதீத பாசம் கொண்ட வின்சென்ட், அது உயிரிழந்தபின் அதன் சாம்பலை தன் உடலில் டாட்டூவாக குத்திக்கொள்ள விரும்பியுள்ளார்.
அத்தகைய டாட்டூ ஆர்ட்டிஸ்ட் ஒருவர் வின்னிபெக்கில் இருப்பது தெரியவரவே, வின்னிபெக்குக்கு வின்சென்ட் புறப்பட்டபோதுதான் விமான நிலையத்தில் பிரச்சினை உருவாகிவிட்டது.
ஆக, விமான நிலைய அதிகாரிகள் அவருக்கு ஒரு ஆலோசனை கூறியுள்ளார்கள்.
அதன்படி, அன்று மாலை, தன் செல்லப்பிராணியின் சாம்பலில் கொஞ்சத்தை ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துக்கொண்டு மீண்டும் விமான நிலையம் சென்றுள்ளார் வின்சென்ட்.
வின்சென்ட் அந்த பிளாஸ்டிக் பை இருக்கும் பையை ஸ்கேனர் வழியாக அனுப்ப, அவரும் அதிகாரிகளும் என்ன ஆகுமோ என பதற்றத்துடன் காத்திருக்க, ஸ்கேனர் அந்த பிளாஸ்டிக் பையை அனுமதித்துவிட்டது.

அதற்குப் பிறகு வின்னிபெக் சென்ற வின்சென்ட், தனது செல்லப்பிராணியின் சாம்பலைப் பயன்படுத்தி, தன் மார்பில் அதன் உருவத்தை டாட்டூவாக பொறித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, எந்த பொருளையும் நிமான நிலையத்தின் ஸ்கேனரைத் தாண்டி எடுத்துச் செல்வது இயலாத காரியம் என்பதை அன்று புரிந்துகொண்டேன் என்கிறார் வின்சென்ட்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |