கனடாவில் புதிய வரலாற்றை படைத்த பிரதமர் ட்ரூடோ!
கனேடிய வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ ஆட்சியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் அடுத்த கவர்னர் ஜெனரலாக சுதேச தலைவரும் வழக்கறிஞருமான மேரி சைமன் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
கனடாவில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாகவும், கனேடிய ஆயுதப்படைகளின் தளபதியாகவும் பணியாற்றிய முதல் பழங்குடி நபராக சைமன் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாயன்று ஒரு செய்தி மாநாட்டில் மேரி சைமனை அறிமுகப்படுத்தியபோது "இன்று, 154 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் நாடு ஒரு வரலாற்று நடவடிக்கை எடுக்கிறது" என்று கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவியில் இருந்து விலகிய கனேடிய முன்னாள் விண்வெளி வீரர் ஜூலி பேயெட்டுக்கு பதிலாக, மெரி சைமன் நாட்டின் 30-வது கவர்னர் ஜெனரலாக பணியாற்றுவார் என்று அறிவித்தார்.
சைமன் நுனாவிக்கில் உள்ள காங்கிக்சுவல்ஜுவாக்கில் (Kangiqsualujjuaq, Nunavik) பிறந்தார், கனேடிய அரசாங்க அறிக்கையின்படி, இன்யூட் (Inuit) பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் கலாச்சாரத்திற்கான வக்கீலாக பணியாற்றியுள்ளார்.
சைமன் சர்க்கம்போலர் விவகாரங்களுக்கான முன்னாள் கனேடிய தூதராகவும், டென்மார்க்கின் முன்னாள் தூதராகவும் மற்றும் தேசிய இன்யூட் அமைப்பான Inuit Tapiriit Kanatami-யின் முன்னாள் தலைவரும் ஆவார்.