தொடர்ந்து அச்சுறுத்தும் குரங்கம்மை தொற்று: முதல் நாடாக கனடா விதித்த பயணக் கட்டுப்பாடு
உலக நாடுகளில் தொடர்ந்து குரங்கம்மை தொற்று பரவல் பீதியை ஏற்படுத்திவரும் நிலையில், கனடாவின் பொது சுகாதாரத்துறை முதல் முறையாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் monkeypox பரவல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தொற்றானது காற்றில் பரவாது என்பதால், பொதுமக்களுக்கான அச்சுறுத்தல் மிகவும் குறைவு என்றே மருத்துவ நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை அளித்துள்ளனர்.
மேலும், நெருக்கமான உடல் தொடர்பு மூலமாகவே குரங்கம்மை பரவும் ஆபத்து இருப்பதால் எச்சரிக்கை தேவை எனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், லெவல் 2 ஆலோசனையின் கீழ் மேம்படுத்தப்பட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என கனடா பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு பயணப்படுபவர்கள் கண்டிப்பாக குரங்கம்மை பரவல் தொடர்பில் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும், பாதிப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் எந்த நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்பதை பொது சுகாதாரத்துறை குறிப்பிடவில்லை, ஆனால் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் குறிப்பிட்ட பகுதிகளில் monkeypox பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், கனேடிய பயணிகளின் பாதுகாப்பு கருதி, சர்வதேச, மாகாண மற்றும் பிராந்திய சுகாதார அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கனடாவில் கியூபெக் மாகாணத்தில் மட்டும் இதுவரை 90 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 813 டோஸ் மருந்தும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் ஐந்து பேர்களுக்கும் ஆல்பர்ட்டாவில் ஒருவருக்கும் குரங்கம்மை தொற்றானது கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் முதல் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் 700கும் அதிகமானோருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.