ரஷ்யாவை பணிய வைக்க உக்ரைனுக்கு ஆயுதங்கள், பணத்தை கொட்டி கொடுக்கும் கனடா! ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு
ரஷ்யா படையெடுக்கும் சூழல் நிலவி வரும் நிலையில் உக்ரைனுக்கு கனடா கடனுதவி மற்றும் ஆயுத உதவி அளிக்கும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்ய பயங்கர ஆயுதங்கள் மற்றும் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
அதேசமயம், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்ய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, ரஷ்யாவிடமிருந்து உக்ரைன் அதன் பிராந்தியத்தை தற்காத்துக்கொள்ள, அமெரிக்கா, பிரித்தானியா, போலாந்து நாடுகள் ஆயுத உதவியை வழங்கியுள்ளன.
ஜேர்மனி மருத்துவ உதவி மற்றும் இராணுவ தலைக்கவசம் போன்ற சாதனங்களை உக்ரைனுக்கு அளித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் சத்தியமாக படையெடுப்பை எதிர்கொள்ளவிருக்கும் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் கனடா சுமார் 500 மில்லியன் கனேடிய டொலர் கடனுதவியாக அளிக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 7.8 மில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களும் வழங்கப்படும் என ட்ரூடோ கூறினார்.
கனடா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இந்த ஆதரவு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுப்பதை நோக்கமாக கொண்டது என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.