சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானுக்கு எதிராக நடவடிக்கை... கனடா, பிரித்தானியா உட்பட 4 நாடுகள் உறுதி!
உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என கனடா, பிரித்தானியா, ஸ்வீடன் மற்றும் உக்ரைன் நாடுகள் உறுதியளித்துள்ளன.
IRGC-யால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்திற்கான இழப்பீடு குறித்து ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை கைவிடுவதாகவும், சர்வதேச சட்டத்தின்படி இந்த விஷயத்தை தீர்க்க முயற்சிப்பதாகவும் கனடா, பிரித்தானியா, ஸ்வீடன் மற்றும் உக்ரைன் நாடுகள் வியாழன் அன்று தெரிவித்தன.
ஜனவரி 2020ல் ஈரான் உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, அதில் கொல்லப்பட்ட 176 பேரில் பெரும்பாலானவர்கள் கனடா, பிரித்தானியா, ஸ்வீடன் மற்றும் உக்ரைன் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, ஈரானுடன் இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு நாடுகளும் இணைந்து ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கியது.
இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களின் சிறந்த முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த விஷயத்தை தீர்க்க பல முயற்சிகள் முன்னெடுத்தோம்.
இருந்தபோதிலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மேலதிக முயற்சிகள் பயனற்றவை என்று ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.
சர்வதேச சட்டத்திற்கு இணங்க இந்த விஷயத்தை தீர்க்க எடுக்க வேண்டிய அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்புக் குழு கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.