ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல்: கனடா பிரதமர் கடும் கண்டனம்
Canada PM Mark Carney Condemns Riyadh Airport Strike: சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கனேடிய பிரதமர் மார்க் காரேனி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ரியாத் விமான நிலையம் மீது தாக்குதல்
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹவுதி படையினரின் தாக்குதலை அடுத்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கனடா, ஜேர்மனி, ஸ்பெயின், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் தங்கள் நாட்டு மக்களை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 5 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும், இன்னும் பலர் காயமடைந்து இருப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை தற்போது மதிப்பிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா பிரதமர் கண்டனம்
இந்நிலையில் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கனேடிய பிரதமர் மார்க் காரேனி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக x தளத்தில் மார்க் கார்னி வெளியிட்ட பதிவில், பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை எந்தவொரு வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவது என்பதற்கு எந்தவொரு அரசியல் மற்றும் ராணுவ காரணங்களையும் கூறமுடியாது. அப்பாவி பொதுமக்கள் குறிவைக்கப்படுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றும் என்றும் எச்சரித்துள்ளார்.
அத்துடன் இத்தகைய பொறுப்பற்ற வன்முறை செயல்களை கனடா மிக கடுமையாக சொற்களால் கண்டிக்கிறது என்று பிரதமர் மார்க் கார்னி எச்சரித்துள்ளார்.