கனடாவில் குருத்வாராவில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்
Canada police charge man for screwdriver stabbings at gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் தாக்குதல் நடத்திய விடயத்தில் அந்த நபர் மீது பொலிசார் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள்.
குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர்
ஆகத்து மாதம் 21ஆம் திகதி, அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.
உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.

காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
குற்றச்சாட்டு பதிவு
தாக்குதல் நடத்திய அந்த நபருடைய பெயர் ஆஸ்டின் (Austin Sim-Pelletier, 27) என தற்போது பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அவர் மீது தாக்குதல், ஆயுதம் வைத்திருந்தது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது இதுவரை தெரியவரவில்லை. இந்நிலையில், இது ஒரு சிக்கலான வழக்கு என்றும், இந்த தாக்குதல் இனவெறுப்பு தொடர்பானதா என்பதை அறிவதற்காக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்டின், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.