ட்ரம்புக்கு எதிர்ப்பு... கனடா மாகாணங்களின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு
கனேடிய பொருட்களுக்கு வரி விதிக்க இருப்பதாக மிரட்டியுள்ள ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில், கனடா மாகாணங்களின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ட்ரம்புக்கு எதிர்ப்பு...
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வரும் திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.
பதவியேற்றதும் முதல் வேலையாக கனடாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது 25 சதவிகிதம் வரி விதிக்க இருப்பதாக மிரட்டியுள்ளார் ட்ரம்ப்.
ஆகவே, ட்ரம்பின் முடிவுக்கு தக்க பதிலடி கொடுக்க கனடா திட்டமிட்டுவருகிறது.
ட்ரம்பின் வரி விதிப்பை எதிர்கொள்வது தொடர்பில் ஆலோசனை செய்வதற்காக, நேற்று, புதன்கிழமை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் 12 மாகாணங்களின் பிரீமியர்களும் சந்தித்து பேசினார்கள்.
ஒத்துழைக்க ஆல்பர்ட்டா மாகாண தலைவர் மறுப்பு
ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தக்க நடவடிக்கை எடுக்க கனடாவின் பிரீமியர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
ஆனால், ட்ரம்புக்கு எதிராக முடிவெடுக்க இருக்கும் அவர்களுடைய ஒத்துழைக்க ஆல்பர்ட்டா மாகாண தலைவர் டேனியல் ஸ்மித் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்ட ஸ்மித், ட்ரம்பை எதிர்க்கும் திட்டத்துடன் தான் ஒத்துப்போகப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடா ஃபெடரல் அரசு அலுவலர்கள், அமெரிக்காவுக்கான ஆற்றல் விநியோகத்தை நிறுத்துவது மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆற்றல் மற்றும் பிற தயாரிப்புகள் மீது வை விதிப்பது போன்ற விடயங்கள் குறித்து வெளிப்படையாகவும், தனிப்பட்ட முறையிலும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இவையெல்லாம் முடிவுக்கு வரும் வரையில், ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு எதிரான ஃபெடரல் அரசின் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஆல்பர்ட்டா மாகாணத்தால் இயலாது என குறிப்பிட்டுள்ளார் ஸ்மித்.
விடயம் என்னவென்றால், கனடா நாளொன்றிற்கு அமெரிக்காவுக்கு நான்கு மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்துவருகிறது.
அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பல, முழுமையாக கனடாவின் கச்சா எண்ணெயைத்தான் நம்பி உள்ளன.
கனடா கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால், அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
வரிகள் விதிப்பதாக மிரட்டும் ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தும் கனடா அரசின் திட்டத்துக்கு ஆல்பர்ட்டா மாகாண தலைவர் டேனியல் ஸ்மித் மறுப்பு தெரிவிக்க முக்கிய காரணம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் பெரும் அளவு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில்தான் எடுக்கப்படுகிறது என்பதுதான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |