கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சரிடமிருந்து ஒரு மகிழ்ச்சியளிக்கும் செய்தி
அக்டோபர் மாதத்தில் 46,000 புலம்பெயர்வோர் கனடாவை வந்தடைந்துள்ள நிலையிலும், மேலும் அதிக புலம்பெயர்வோரை வரவேற்கத் தயாராகிவருகிறது கனடா.
அதற்காக, தான் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தும், கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதை கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பில் ஒரு நேர்மறையான வித்தியாசத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக தான் பார்ப்பதாக, கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser தெரிவித்துள்ளார்.
கனேடிய புலம்பெயர் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டபின் முதன்முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த Fraser, இந்த மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டார்.
நாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில், கனடாவின் புலம்பெயர்தல் மட்டத்தை (Canada’s immigration levels) அதிகரிக்கத் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
கொரோனா பரவல் முதலான பிரச்சினைகள் காரணமாக குறைவான அளவிலேயே புலம்பெயர்வோர் கனடா வந்துள்ளதால், கனடாவில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது.
தன் வரலாற்றிலேயே மிகப்பெரிய இலக்காக, 401,000 புலம்பெயர்வோரை 2021ஆம் ஆண்டுக்குள் வரவேற்கும் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு வருகிறது கனடா. அத்துடன், 2022இல் மேலும் 411,000 புலம்பெயர்வோரையும், 2023இல் கூடுதலாக 421,000 புலம்பெயர்வோரையும் கனடாவுக்கு வரவேற்க அந்நாடு திட்டமிட்டு வருகிறது.
2022 - 2024 புலம்பெயர்தல் மட்ட திட்டம் 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.