கனடா நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை: விசாரணை நடவடிக்கை தீவிரம்!
கனடாவின் நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வரக்கூடும் என நாட்டின் எல்லைப் பாதுகாப்பு உளவுத் துறை தகவல் தெரிவித்து இருந்த நிலையில், ஆபத்து குறித்து கனேடிய பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கனடாவின் நாடாளுமன்றத்தின் அருகில் காணப்படும் வாகனங்களில் வெடிமருந்துகள் நிரப்பப்படலாம் என நாட்டின் எல்லைப் பாதுகாப்பு உளவுத் துறை சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கனடாவின் ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, நாடாளுமன்றத்தை சுற்றி பல மணி நேரம் பூட்டி வைக்க வேண்டிய கட்டாயம் கனேடிய காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சனிக்கிழமை கனேடிய பொலிஸார் நடத்திய விசாரணையில், சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் மற்றும் இரண்டு வாகனங்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அச்சுறுத்தல் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும், தனியுரிமை மற்றும் செயல்பாட்டுக் காரணங்களுக்காக, குற்றவியல் விசாரணைகள் தொடர்பான தகவல்களை RCMP உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ அல்லது வெளியிடவோ இல்லை என்று ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று தொடர்பாக விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒட்டாவாவின் பாராளுமன்ற வளாகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மூன்று வாரங்களாக நூற்றுக்கணக்கான ட்ரக்குகள் மற்றும் வாகனங்கள் அந்தப் பகுதியைத் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் அதிகரித்தது.
கூடுதல் செய்திகளுக்கு: தப்பிக்கும் ஆற்றுப் பாலத்தை தகர்த்தெறிந்து...உக்ரைன் மக்களை சிறைப்பிடிக்க தயாரான ரஷ்யா!
லொறி ஓட்டுநர்களின் இந்த போராட்டத்தின் போது அன்று மூடப்பட்ட நாடாளுமன்ற வீதிகள் இதுவரை முழுமையாக திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.