தனது தூதரக அதிகாரிகளை இந்தியாவிலிருந்து திருப்பி அழைத்துக்கொள்ளும் கனடா: செய்தித்தொடர்பாளர் தகவல்
கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தனது தூதரக அதிகாரிகள் சிலரை இந்தியாவிலிருந்து திருப்பி அழைத்துக்கொள்ள கனடா முடிவு செய்துள்ளது.
செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ள தகவல்
கனடாவின் சர்வதேச விவகாரங்கள் துறையின் செய்தித்தொடர்பாளரான Jean-Pierre Godbout என்பவர், இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் ஒன்றில், கனேடிய தூதரக அதிகாரிகள் சிலருக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகவும், ஆகவே, கனடா தனது தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தல்களின் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க கனடா முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ள Godbout, ஆனாலும், பணிகள் தொடரும் வகையில் தூதரக அதிகாரிகளும் உள்ளூர் அலுவலர்களும் அனைத்து அலுவலகங்களிலும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
தூதரக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு
இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படும் என்று கூறியுள்ள Godbout, எந்தெந்த அதிகாரிகள் கனடாவுக்கு திருப்பி அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றார்.
வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதாரக அதிகாரிகளுக்கு இந்தியா பாதுகாப்பு அளிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ள Godbout, எங்கள் நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் அவ்வாறே பாதுகாப்பளிக்கப்படும் என்றார்.
ஜூலை மாதத்தில், சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் போஸ்டர்கள் கனடாவில் ஒட்டப்பட்டதையடுத்து, தனது தூதரக அதிகாரிகளுக்கு கனடா அரசு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கனடாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |