புலம்பெயர்வோர் முதல் சர்வதேச மாணவர்கள் வரை வெளிநாட்டவர்களை கவர்ந்திழுப்பதில் கனடாவுக்கு முதலிடம்
உலக நாடுகளின் நற்பெயர் குறித்த ஆய்வு ஒன்றில், புலம்பெயர்வோர் முதல் சர்வதேச மாணவர்கள் வரை, வெளிநாட்டவர்களை கவர்ந்திழுப்பதில் கனடாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
முதன்முறையாக, Anholt-Ipsos Nation Brands Index 2021 என்ற தரவரிசைப்பட்டியலில் கனடா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், புலம்பெயர்தல் மற்றும் மூலதனம் முதலான காரணிகளில் கனடா அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றதுதான்.
The Nation Brands Index என்ற அமைப்பு, உலக நாடுகளின் நற்பெயரை அளவீடு செய்கிறது. இந்த ஆண்டு, 60 நாடுகளை, 60,000 நேர்காணல்கள் மூலம் அளவீடு செய்தது அந்த அமைப்பு.
ஆறு காரணிகளின் அடிப்படையில் நாடுகள் தரவரிசப்படுத்தப்பட்டன. அவையாவன, ஏற்றுமதி, ஆட்சிமுறை, கலாச்சாரம், மக்கள், சுற்றுலா மற்றும் மூலதனமும் புலம்பெயர்தலும்.
புலம்பெயர்தலும் மூலதனமும் என்ற வகையில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. இது, புலம்பெயர்வோர், வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு நாட்டின் திறனின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. அத்துடன், ஒரு நாட்டின் வாழ்க்கைத்தரம் மற்றும் தொழில் செய்யும் சூழலும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
மேலும், ஆட்சிமுறையிலும் கனடாவுக்கு அதிகபட்ச மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.
மூன்றாவதாக, மக்கள் என்ற வகைப்பாட்டில், அதாவது, நாட்டு மக்களின் செயல்தகுதி, திறந்த மனப்பான்மை, தோழமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய விடயங்களில் கனடாவுக்கு உச்சபட்ச மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.
மற்ற மூன்று காரணிகளிலும், அதாவது, ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் ஆகிய விடயங்களிலும் சீரான மதிப்பெண்களை கனடா தக்கவைத்துக்கொண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக Nation Brands Index தரவரிசைப்பட்டியலில் கனடா முதல் மூன்று இடங்களிலேயே இருந்துவந்தது. இந்த ஆண்டு, ஜேர்மனிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது கனடா.
அத்துடன், 2020இல் இரண்டாவது இடத்திலிருந்த பிரித்தானியாவை பின்னுக்குத் தள்ளி இந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது கனடா.
பிரித்தானியா, இந்த ஆண்டு ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்படுவிட்டது. கலாச்சாரம், ஏற்றுமதி, புலம்பெயர்தலும் மூலதனமும் ஆகிய விடயங்களில் பொதுவாக நேற்மறையான மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், மக்களுடைய புலனுணர்வு மற்றும் ஆட்சிமுறை ஆகிய விடயங்கள் பிரித்தானியாவின் பலவீனங்களாக அமைந்துவிட்டன.