வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி அனுமதியை மீண்டும் குறைக்கும் கனடா
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான எண்ணிக்கையை இந்த ஆண்டும் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 சதவிகிதம் குறைவு
கனேடிய அரசாங்கம் குடியிருப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சேவைகள் மீதான அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றே கூறப்படுகிறது.
இதனால், 2025ல் 437,000 கல்வி அனுமதி மட்டுமே சர்வதேச மாணவர்களுக்கு கனடா அளிக்க உள்ளது. இது 2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 10 சதவிகிதம் குறைவு.
சமீபத்திய ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி வீட்டுவசதி பற்றாக்குறையை அதிகரிப்பதாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, 2024 ல் புதிய சர்வதேச மாணவர் அனுமதிகளுக்கு உச்சவரம்பை கனடா அறிமுகப்படுத்தியது.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் பதவியை விட்டு விலகுவாதாக அறிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சமீபத்திய மாதங்களில் குடியேற்ற அளவைக் குறைப்பதாக உறுதியளித்திருந்தார்.
கனடாவில் புதிதாக குடியேறும் மக்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளதும் காரணமாக கூறப்படுகிறது. 2023 ல், 650,000 க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்விக்கான அனுமதிகளை வழங்கியதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
சான்றளிப்பு கடிதம்
புலம்பெயர்ந்தோரால் மக்கள்தொகை வளர்ச்சி அதிகரிக்க சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் வீட்டுச் செலவுகளை அதிகரிக்க செய்தது.
இருப்பினும், உள்நாட்டு மாணவர்களை விட சர்வதேச மாணவர்கள் கணிசமாக அதிக கல்விக் கட்டணத்தைச் செலுத்துகிறார்கள். கடந்த ஆண்டு சர்வதேச மாணவர்களுக்கான உச்சவரம்பு அமுல்படுத்தப்பட்டதை அடுத்து,
பெரும்பாலான கல்வி அனுமதி விண்ணப்பதாரர்கள் தற்போது மாகாண அல்லது பிராந்திய சான்றளிப்பு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கும் கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சான்றளிப்பு கடிதங்கள், பெடரல் அரசின் சர்வதேச மாணவர் உச்சவரம்புக்குள் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |