வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்ததன் பலனை அனுபவிக்கத் துவங்கியுள்ள கனடா
கனடாவுக்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால், கனடாவுக்கு வீட்டு வாடகைகள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளதாக தேசிய வாடகை அறிக்கை தெரிவிக்கிறது.
வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்
கனடாவின் மக்கள்தொகை 41 மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், அதற்குக் காரணம் புலம்பெயர்தல் என்று கூறி, அதைக் கட்டுப்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்தது கனடா அரசு.
2023ஆம் ஆண்டு, 5,00,000க்கும் அதிகமான சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கியது. 2024ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு 4,85,000 சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டிலோ, அதாவது, 2025ஆம் ஆண்டிலோ, 4,37,000 பேருக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டின் இறுதிவாக்கிலிருந்து, முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களில், குறைந்தபட்சம் 16 மாதங்களாவது படிக்கும் வகையிலான கல்வித்திட்டங்களில் சேருவோரின் துணைவர்களுக்கு மட்டுமே கனடாவில் பணி அனுமதி வழங்கப்பட உள்ளது.
வேறு நாடுகள் பக்கம் கவனத்தைத் திருப்பும் மாணவர்கள்
இப்படி தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா அரசு கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டே வருவதால், கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருகிறது.
கனடா, பிரித்தானியா முதலான பல நாடுகள், உள்நாட்டு மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களிடம் பல மடங்கு அதிக கட்டணம் வாங்குகின்றன.
பல பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை நம்பியே செயல்படுகின்றன.
இருந்தும், சர்வதேச மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆகவே, பல மாணவ மாணவிகள், தங்களை வரவேற்கும், சாதகமான, நிம்மதியான சூழல் கொண்ட நாடுகள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், கனடாவுக்கு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |