கனடாவில் 16 இளைஞர்களை பலிவாங்கிய சாலை விபத்தை ஏற்படுத்திய இந்திய சாரதி: நாடுகடத்தப்படுவது குறித்து விரைவில் முடிவு
கனடாவில் இந்திய சாரதி ஒருவரால் நிகழ்ந்த விபத்து, 16 பேரின் உயிரை பலிவாங்கியதுடன், 13 பேர் படுகாயமடைய காரணமாக அமைந்தது.
16 உயிர்களை பலிவாங்கிய விபத்து
2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, கனடாவின் Saskatchewan பகுதியில், Jaskirat Singh Sidhu என்ற இந்தியர் ஓட்டிய ட்ரக், பேருந்து ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது.
அந்த பேருந்தில் Broncos ஜூனியர் ஹாக்கி அணியைச் சேர்ந்த இளைஞர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அந்த கோர விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் படுகாயமடைந்தனர்.
ஆகவே, Sidhuவுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தான் பயணிக்கும் சாலைக்கு குறுக்கே மற்றொரு சாலை குறுக்கிடுவதாக அறிவிப்பு பலகைகளும், மின்னும் விளக்குகளுடன் சிக்னல்களும் இருந்தும், தான் பிரேக் பிடிக்கவில்லை என ஒப்புக்கொண்ட Sidhu, தண்டனையையும் ஏற்றுக்கொண்டார்.
Sidhu கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர். பெடரல் சட்டத்தின்படி, நிரந்தர வாழிட உரிமம் பெற்ற ஒருவர் குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்டு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பெற்றால், தங்கள் தண்டனைக்காலத்திற்குப் பின் அவர் நாடு கடத்தப்படலாம்.
ஆகவே, கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி, Sidhu புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என பரிந்துரை செய்தது.
அந்த அமைப்பு Sidhu இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பில் முடிவெடுக்கும். அதன்படி, Sidhu புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
பிள்ளைகளை இழந்த பெற்றோரின் கருத்து
அந்த விபத்தில் உயிரிழந்த சில பிள்ளைகளின் பெற்றோர் Sidhuவை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால், Jaxon என்ற இளைஞரின் தந்தையான Chris Joseph என்பவரோ, Sidhuவை நாடு கடத்தவேண்டும் என கோரியுள்ளவர்களில் ஒருவர் ஆவார்.
சட்டம் எல்லோருக்கும், எல்லா காரணங்களுக்காகவும் ஒன்றுதான் என்று கூறியுள்ள அவர், 29 குடும்பத்தினர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதை நான் பாராட்டுகிறேன். ஆனால், எனது பார்வையில் நாடுகடத்துதல் என்பது மன்னிப்பதைக் குறித்த விடயம் அல்ல.
அது நீங்கள் ஒருவரைக் குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்பதைக் குறித்ததல்ல, அவர் ஒரு ஒரே ஒரு தவறுதான் செய்தார் என்று நீங்கள் நினைப்பதைக் குறித்ததும் அல்ல.
அவர் நாடு கடத்தப்படுவாரானால், ஒருவேளை அவரை மன்னிப்பது குறித்து ஒரு வேளை நான் எண்ணலாம், ஆனால், அவர் நாடுகடத்தப்படவில்லையானால், அது எங்களை மேலும் காயப்படுத்தக்கூடும். அப்படி ஒரு நிலை எங்களுக்கு ஏற்படவேண்டாம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.
பெடரல் நீதிமன்றம் முன் வழக்கு
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க பெடரல் நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
வழக்கில் வெற்றி கிடைக்குமானால் மீண்டும் அது மீளாய்வுக்காக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சிக்கு அனுப்பிவைக்கப்படும். Sidhu நாடுகடத்தப்படுவது குறித்து அதன் பிறகுதான் முடிவு செய்யப்படும்.
நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த Sidhu, கடந்த ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.