கனடாவிற்குள் இராணுவம் களமிறங்குமா? பிரதமர் முக்கிய அறிவிப்பு
கனடா தலைநகரில் கொரோனா நடவடிக்கைகளுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இராணுவப்படைகளை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஏறக்குறைய ஒரு வாரம் கடந்துள்ள இந்த போராட்டம், எல்லை தாண்டிய டிரக் ஒட்டுநர்களுக்கான மத்திய அரசின் தடுப்பூசி ஆணையை எதிர்த்து தொடங்கப்பட்டது.
கடந்த வார இறுதியில் ஆயிரக்கணக்கான மக்கள், பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பகுதியில் போக்குவரத்தை வேண்டுமென்றே தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 250 பேர் இன்னும் அங்கேயே இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர இராணுவத்தை அழைக்கலாம் என்று ஒட்டாவாவின் பொலிஸ் தலைவர் இந்த வார தொடக்கத்தில் கூறினார்.
இந்நிலையில், கனேடியர்கள் ஈடுபாடு கொண்டுள்ள சூழ்நிலைகளில் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கு முன்பு, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் ட்ரூடோ கூறினார்.
மேலும், இது சாதாரண விஷயமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், ஒட்டாவா அல்லது ஒண்டாரியோ மாகாணத்தில் இருந்து உதவிக்கான முறையான கோரிக்கைகள் விடுக்கப்படடால் அது பரிசீலிக்கப்படும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.