அமெரிக்காவை முந்திய கனடா... மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் அபாயம்
கனடாவின் மிகப்பெரிய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் வீதம் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் பெருமளவு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. பொது சுகாதார நடவடிக்கைகள் பலவீனமாக இருந்தால் ஜூன் மாதத்திற்குள் ஒன்ராறியோவில் நோய்த்தொற்றுகள் 600% வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரம், தொற்றுநோய் பரவல் தொடங்கிய பின்னர் முதல் முறையாக, அமெரிக்காவை விட ஒரு மில்லியனுக்கு அதிகமான உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளை கனடா பதிவு செய்தது.
மேலும், இதுவரை 22 சதவீத கனேடியர்கள் மட்டுமே தங்கள் முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அமெரிக்க மக்களில் 37% பேர்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒன்ராறியோ மாகாணம், புதிய கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. 6 வாரங்கள் வரை குடியிருப்பிலேயே தங்கி இருத்தல், தேவையற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடு,
குடியிருப்பை விட்டு வெளியேறும் மக்களை பொலிசார் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும் சிறப்பு அதிகாரம், தற்போதைய நிலையில் தேவையற்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தல்.
இதனிடையே, சமீபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய நகரமான டொராண்டோவுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி அளித்துள்ளார்.
தற்போதை நிலையில், ஒன்ராறியோவில் மூன்றில் இரண்டு பங்கு நோய்த்தொற்றுகள் பிரித்தானியாவில் உருமாற்றம் கண்ட கொரோனா வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் முழு வீச்சில் முன்னேறி வந்தாலும், கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 38% கொண்ட ஒன்ராறியோவில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 30,000 வரை உயரக்கூடும் என்று நிபுணர் குழு எச்சரித்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை, ஒன்ராறியோவில் 4,812 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை 1,955 எனவும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 701 எனவும் பதிவாகியுள்ளது.