Omicron கொரோனா பரவல்: கனேடியர்களுக்கு கனடா தலைமை மருத்துவ அலுவலர் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவின் தலைமை மருத்துவ அலுவலரான Dr Theresa Tam, வர இருக்கும் வாரங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஏற்கனவே களைத்துப்போயிருக்கும் சுகாதாரத்துறையினர் கொரோனா பரவலை எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும், அதைத் தவிர்க்கும் வகையில், விடுமுறை காலத் திட்டங்களிடுமாறும் கனேடியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்ற வாரம், கனடா நாளொன்றிற்கு 5,000 புதிய கொரோனா தொற்றுக்களை எதிர்கொண்டது. இது முந்தைய வாரத்தைவிட 45 சதவிகிதம் அதிகமாகும் என்கிறார் Dr Tam.
அத்துடன், கொரோனா தொற்றியவர்களில் 344 பேர் Omicron வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்தான் என்கிறார் அவர். அதாவது குறுகிய காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை சுகாதார அமைப்பையே திக்குமுக்காட வைத்துவிடும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார் Dr Tam.
அத்துடன், கனடாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்த வாரத்துடன் 30,000ஐ தொட்டுள்ள நிலையில், தற்போது Omicron அச்சுறுத்தல் வேறு உருவாகியுள்ளது.
மாகாண அரசுகள், தேவாலயங்கள், திரையரங்குகள் முதலான இடங்களில் மக்கள் கூடுவது தொடர்பில் கட்டுப்பாடுகளை அதிகரித்துவருகின்றன.
அத்துடன், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனேடியர்கள் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு எதிராகவும் கனேடிய அரசு அதிகாரப்பூர்வ ஆலோசனை தெரிவித்துள்ளது.
கனேடியர்கள் வெளிநாட்டுக்குச் சென்று அங்கு நோய்வாய்ப்பட்டுவிடவோ, சிக்கிக்கொள்ளவோ வேண்டாம் என விரும்புகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் Jean-Yves Duclosம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.