கனடாவில் கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு உருவாகியுள்ள பிரச்சினைகள்
கனடாவில் கல்வி கற்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். கூடவே பணப் பிரச்சினைகளும்... கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்கள் மூன்றாவது நாடு ஒன்றின் வழியாக கனடா செல்லவேண்டியுள்ளதால், அவர்கள் வழக்கமாக செலவு செய்யும் தொகையைவிட எட்டு மடங்கு அதிகம் செலவு செய்து கனடா செல்லவேண்டியுள்ளது.
அதுவும் அந்த மூன்றாவது நாட்டில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும். ஆக, இந்தியாவிலிருந்து கனடா செல்லும் ஒரு மாணவர் அல்லது மாணவிக்கான செலவு இந்திய ரூபாயில் சுமார் 3.5 இலட்சம் என கூறப்படுகிறது! இந்திய மாணவர்கள் மாலத்தீவின் தலைநகரான மாலேவுக்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின் ஐக்கிய அரபு அமீரகம் சென்று அங்கிருந்து கனடாவுக்கு செல்கிறார்கள்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு மாலே செல்லும் விமான நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க முயல்கின்றன. கண்டிப்பாக ரிட்டர்ன் டிக்கெட் வாங்க வலியுறுத்தும் விமான நிறுவனங்கள், இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி போடவும் நிர்ப்பந்திக்கின்றன.
இது போதாதென்று, மாலேயிலிருந்து ரொரன்றோவுக்கு செல்வதற்காக விமான கட்டணம் முன்பு 80,000ஆக இருந்தது, தற்போது 2 இலட்சமாக உயர்ந்துள்ளது.
மாலேயில் தனிமைப்படுத்துதலுக்கான செலவு 1.25 இலட்ச ரூபாய், விமான பயணத்துக்கு 2 இலட்ச ரூபாய்.
ஆக மொத்தம் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு செல்லும் ஒரு மாணவருக்கான செலவு 3.5 இலட்ச ரூபாயாம்! பெற்றோர் பாடு கஷ்டம்தான்...