கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த குடும்பத்துக்கு கடைசி நேரத்தில் கிடைத்த நல்ல செய்தி
கனடாவிலிருந்து தாய் ஒருவரும் அவரது மூன்று பிள்ளைகளும் நாடுகடத்தப்பட இருந்த நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்கு கனடா பெடரல் அரசிடமிருந்து ஒரு செய்தி வந்தது.
நாடுகடத்தப்பட இருந்த தாயும் பிள்ளைகளும்
2019ஆம் ஆண்டு, Roxham Road வழியாக கனடாவுக்குள் நுழைந்தனர், ஆர்லின் (Arlyn Huilar), டேவிட் (David Ajibade) தம்பதியரும், பிள்ளைகளும்.
ஆர்லின் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், டேவிட் நைஜீரியாவைச் சேர்ந்தவர். நைஜீரியாவில் வாழலாம் என்றால், அவர்களுடைய பிள்ளைகளை ஒரு கும்பல் கடத்த முயன்றது, பிலிப்பைன்ஸுக்குச் சென்றால், பிள்ளைகள் இனவெறுப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆகவே, தம்பதியர் பிள்ளைகளுடன் கனடாவுக்குள் நுழைந்துவிட்டார்கள்.
Submitted by the Ajibade-Huilar family
டேவிட் குடும்பம் அப்போதே கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கடந்த மாதம் அவர்கள் நாடுகடத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி டேவிடும் அவரது இளைய மகனும் நைஜீரியாவுக்கும், ஆர்லினும் மற்ற இரண்டு பிள்ளைகளும் பிலிப்பைன்ஸுக்கும் செல்லவேண்டும் என முடிவானது.
டேவிடும் அவரது கடைசி மகனும் நைஜீரியா புறப்பட இருந்த நேரத்தில், குழந்தைகளைத் தாயிடமிருந்தும் உடன் பிறந்தவர்களிடமிருந்தும் பிரிக்கக்கூடாது என பெடரல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் உத்தரவிட, டேவிட் மட்டும் ஜூன் மாதம் 28ஆம் திகதி நைஜீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
தாய்க்கும் பிள்ளைகளுக்கும் கடைசி நேரத்தில் கிடைத்த நல்ல செய்தி
ஆர்லினும் அவரது பிள்ளைகளும் இன்று பிலிப்பைன்ஸுக்கு நாடுகடத்தப்பட இருந்தனர். நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை, தாயும் பிள்ளைகளும் ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருந்தது.
ஆம், மனிதநேய அடிப்படையில் ஆர்லினுக்கும் பிள்ளைகளுக்கும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையிலிருப்பதால், அவர்களுடைய நாடுகடத்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி அவர்களுக்கு செய்தி அனுப்பியிருந்தது. அதாவது, உத்தரவிட்டபடி, இன்று அவர்கள் நாடுகடத்தப்படமாட்டார்கள்.
டேவிட் இன்னமும் நைஜீரியாவில்தான் இருக்கிறார் என்றாலும், ஆர்லினுக்கும் பிள்ளைகளுக்குமாவது நல்லது நடக்கலாம் என்பதால், அவரும் இந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |