கனடாவில் குடும்ப பிரச்சினை என அழைத்த பெண்; வீட்டிற்கு சென்ற 2 பொலிஸாருக்கு நேர்ந்த பயங்கரம்
கனடா, எட்மண்டன் நகரத்தில் பணியில் இருந்த இரு அதிகாரிகளை 16 வயது சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை
ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில், குடும்பத் தகராறு காரணமாக அழைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அங்கு நடந்த பிரச்சினைக்கு இடையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தகராறு நடந்த குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனே இந்த கொலைகளை செய்ததாக எட்மன்டன் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
EDMONTON POLICE SERVICE
மருத்துவமனையில் சிறுவனின் தாய்
இந்த சம்பவத்தில், சிறுவனின் தாயும் (55) சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட அதிகாரிகள் டிராவிஸ் ஜோர்டான் (35) மற்றும் பிரட் ரியான் (30) இருவரும் எட்மண்டன் பொலிஸ் சேவையில் பணியாற்றினர். ஜோர்டான் 8 ஆண்டுகளுக்கும் மேலாக படையில் இருந்தார், ரியான் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரியாக இருந்தார்.
சிறுவனின் தாய் பொலிஸாரை வீட்டுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பொலிஸார் அப்பெண்ணை கட்டிடத்திற்கு வெளியே சந்தித்தனர். பின்னர் அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பை நெருங்கியபோது, சிறுவன் அதிகாரிகளை வாசலிலேயே வைத்து பலமுறை சுட்டுக் கொன்றதாக, எட்மண்டன் காவல்துறைத் தலைவர் டேல் மெக்ஃபீ தெரிவித்தார்.
Photograph: Canadian Press/Rex/Shutterstock
"இந்த நேரத்தில், அவர்கள் தங்கள் துப்பாக்கிகளை வெளியே எடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன," என்று அவர் கூறினார். மேலும், அவர்கள் இருவரது இறப்பிற்கும் வருத்தம் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே சக அதிகாரிகள் வந்து, ஆம்புலன்சுக்காகக் காத்திருக்காமல், இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்.