ட்ரம்ப் மிரட்டலுக்கு நடுங்கும் கனடா... எல்லை பாதுகாப்பு தொடர்பில் உடனடி முடிவு
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதன் தொடர்ச்சியாக, கனடா அமெரிக்கா எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா அரசு முடிவு செய்துள்ளது.
மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கையெழுத்திடும் முதல் ஆவணங்களில் ஒன்று, கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது தொடர்பானதுதான் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் போதைப்பொருட்களையும், புலம்பெயர்ந்தோரையும் கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் கட்டுப்படுத்தும்வரை இந்த வரிவிதிப்பு அமுலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா அரசு முடிவு
ட்ரம்ப் மிரட்டலின் தொடர்ச்சியாக, கனடா அமெரிக்கா எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா அரசு முடிவு செய்துள்ளது.
புதன் கிழமையன்று இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களை சந்தித்த கனடா பொது பாதுகாப்புத் துறை அமைச்சரான Dominic LeBlanc, கனடா அரசு, எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, கூடுதல் முதலீடுகள் செய்ய இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அது தொடர்பான விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
மேலும், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் முறையான அனுமதியின்றி மக்கள் நுழைவதைத் தடுக்க, கனடா அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாகவும் கனடா பொது பாதுகாப்புத் துறை அமைச்சரான Dominic LeBlanc தெரிவித்தார்.
ட்ரம்ப் வரி விதிக்க இருப்பதாக மிரட்டியதைத் தொடர்ந்து கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மாகாண பிரீமியர்களை அவசரமாக சந்தித்த நிலையில், அவர்கள் ட்ரம்பின் மிரட்டல் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்தே அமைச்சர் Dominic LeBlanc எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, கூடுதல் முதலீடுகள் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |