வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்வோரை அனுமதிக்க கனடா திட்டம்: எத்தனை பேருக்கு அனுமதி தெரியுமா?
கொரோனா காலகட்டத்தால் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் எக்கச்சக்கமாக பரிசீலிக்கப்படாமல் குவிந்துவிட்ட நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்வோரை அனுமதிக்க கனடா திட்டம் வைத்துள்ளதாக கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெடரல் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser வெளியிட்டுள்ள தனது புதிய திட்டத்தின்படி, கனடா 2022ஆம் ஆண்டில் 431,645 பேருக்கும், 2023ஆம் ஆண்டில் 447,055 பேருக்கும், 2024ஆம் ஆண்டில் 451,000 பேருக்கும் நிரந்தர வாழிட உரிமம் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
2024 வாக்கில், கனடாவுக்கு புதிதாக வருபவர்களின் எண்ணிக்கை வீதத்தை, கனடாவின் மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்க விரும்புவதாக பெடரல் அரசு தெரிவித்துள்ளது.
இன்னமும் கனடாவில், பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படவேண்டியிருப்பதாக Fraser தெரிவித்துள்ளார்.
கனடா கொள்ளைநோய் சூழலிலிருந்து விடுபடுவதற்கு புலம்பெயர்தலை அதிகரிப்பதுதான் வழி என அவர் தெரிவித்தார்.
நமது சுகாதார அமைப்பு, கல்வி அமைப்பு, சமூக சேவைகள் மற்றும் நலன்கள் அமைப்பு ஆகியவற்றை தாக்குப்பிடிக்க வேண்டுமானால், நமக்கு அதிக பணியாளர்கள் வேண்டும், அதிக குடும்பங்கள் கனடாவுக்கு வரவேண்டும் என்று Fraser கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.