எந்த காலத்திலும் நிறைவேறாது... ட்ரம்புக்கு மீண்டும் பதிலளித்த ட்ரூடோ
அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற கனடாவுக்கு எந்த நோக்கமும் இல்லை என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வெறும் கனவு மட்டுமே
அப்படியான ஒரு சூழல் எந்த காலத்திலும் உருவாகப்போவதில்லை என்றும் ட்ரூடோ தெரிவித்துள்ளார். முன்னாள் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியுடன் பேசுகையில்,
கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறக்கூடும் என்று டொனால்டு ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவரும் கருத்துக்கள் குறித்து ட்ரூடோ விவாதித்துள்ளார். ட்ரம்பின் சூழ்நிலை தமக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள ட்ரூடோ, 51வது மாகாணம் என்பது வெறும் கனவு மட்டுமே, எந்த காலத்திலும் அது நிறைவேறப்போவதில்லை என்றார்.
பெடரல் தேர்தலுக்கு முன்னதாக கருத்துக் கணிப்புகளில் அதிகரித்து வரும் செல்வாக்கின்மைக்கு ஆளான பிரதமர் ட்ரூடோ, தனது லிபரல் கட்சி புதிய தலைவரைத் தெரிவு செய்த பிறகு மார்ச் மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ட்ரம்ப் சமீபத்தில் மீண்டும் மீண்டும் கருத்து தெரிவித்து வருகிறார். மட்டுமின்றி, கனடா பிரதமரை சிறுமைப்படுத்தும் வகையில், ஆளுநர் ட்ரூடோ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
25 சதவிகித வரி
ட்ரம்பின் அப்படியான கருத்துகளை தாம் பொருட்படுத்துவதில்லை என்றே ட்ரூடோ ஞாயிறன்று தெரிவித்துள்ளார். மேலும், கனடா அமெரிக்காவில் சேராததற்கு ஒரு பெரிய காரணம், கனடியர்கள் அதை விரும்பவில்லை என ட்ரூட்டோ குறிப்பிட்டுள்ளார்.
கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவிகித வரிகளை அமுல்படுத்தும் திட்டத்தை ட்ரம்ப் அறிவித்ததிலிருந்து, ட்ரம்ப் மற்றும் கனடா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
ட்ரம்பின் இந்த நடவடிக்கை கனடாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் பழிவாங்கும் வரி விதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
கனடாவிலிருந்து வரும் மின்சாரம் அல்லது எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு எந்த அமெரிக்கரும் 25 சதவீதம் அதிகமாக செலுத்த விரும்பவில்லை என்றே ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |