பின்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு ஆதரவாக வாக்களித்த முதல் நாடாகியுள்ள கனடா...
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்த முதல் நாடாகியுள்ளது கனடா.
உக்ரைனுக்குள் ரஷ்யா திடீரென ஊடுருவியதைத் தொடர்ந்து, தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என்று கருதிய பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்தன.
ஆனால், அவை நேட்டோ அமைப்பில் இணையவேண்டுமானால், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளின் நாடாளுமன்றங்கள், அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு அந்நாடுகளுக்குக் கிடைக்கும். அதாவது நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால், ’ஒரு உறுப்பு நாட்டின் மீதான தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலுக்கு சமம்’ என்ற கொள்கையின்படி, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்படும்.
இந்நிலையில், பின்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு ஆதரவாக வாக்களித்து, அந்நாடுகளுக்கு ஆதரவாக வாக்களித்த முதல் நாடாகியுள்ளது கனடா.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ஆதரவாக ஏகமனதான வாக்களித்துள்ளார்கள்.
இது குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள்,விரைவாகவும் திறம்படவும் நேட்டோ அமைப்புடன் ஒன்றிணைந்து, நேட்டோ அமைப்பின் ஒருங்கிணைந்த பாதுகாப்புக்கு தங்கள் பங்களிப்பைச் செய்யும் என்பதில் கனடாவுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.