மாதம் ஒன்றிற்கு 45,000 பேர் வீதம் இரண்டு மாதங்களுக்குள் 134,000 புலம்பெயர்வோரை வரவேற்க காத்திருக்கும் கனடா
2021ஆம் ஆண்டுக்குள், 401,000 புதிய புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிப்பதை இலக்காகக்கோண்டுள்ள கனடா, மாதம் ஒன்றுக்கு குறைந்தது 45,000 பேர் வரை நாட்டுக்குள் அனுமதித்தால் மட்டுமே தன் இலக்கை அடையமுடியும்.
அவ்வகையில், செப்டம்பர் மாதத்தில் மட்டும், கனடா 45,000 பேரை வரவேற்றுள்ளது.
இந்த செய்தியை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு உறுதி செய்துள்ளது.
நவயுக கனேடிய வரலாற்றிலேயே இதுவரை கனடா மாதம் ஒன்றிற்கு இத்தனை புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதித்ததில்லை என்பதால், நாட்டுக்குள் மாதம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படுவோரின் அதிக எண்ணிக்கை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலகட்டத்தில் கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. 2020 ஏப்ரலைப் பொருத்தவரை, நவநாகரீக கனடா வரலாற்றிலேயே மிகக்குறைந்த அளவாக, 4,000 பேர் மட்டுமே கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்கள்.
2020இல், 341,000 புதிய புலம்பெயர்வோரை வரவேற்பதை கனடா இலக்காகக் கொண்டிருந்த நிலையில், 184,000 பேர் மட்டுமே கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்கள்.
அதை ஈடு செய்யும் வகையில், இந்த ஆண்டு 401,000 புதிய புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிப்பது என கனடா முடிவு செய்தது.
ஆனால், இதுவரை கனடாவுக்கு 267,000 புலம்பெயர்ந்தோர் மட்டுமே புதிதாக வந்துள்ளார்கள். நவம்பர், டிசம்பருக்குள் மீதமுள்ள 134,000 என்ற எண்ணிக்கை பூர்த்தி செய்யப்படவேண்டுமானால், மாதம் ஒன்றிற்கு சுமார் 45,000 பேர் வரை நாட்டுக்குள் அனுமதித்தால் மட்டுமே கனடா தன் இலக்கான 401,000 புலம்பெயர்ந்தோர் என்ற எண்ணிக்கையை அடையமுடியும்.
அதற்காக கனடா பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. ஆகவே, தகுதியுடையோர் முயற்சி செய்தால் கனடாவுக்கு புலம்பெயரும் கனவை நனவாக்கிகொள்ளலாம்.