அவர்கள் தயார் என்றால்... வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை குறித்து பிரதமர் கார்னி சூசகம்
அமெரிக்க நிர்வாகம் தயார் என்றால், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க கனடா உறுதியாக இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
பிரதமர் கார்னி கருத்து
கனடா மீது விதித்துள்ள வரிகளை விமர்சிக்கும் ஒரு விளம்பரம் தொடர்பாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ள நிலையிலேயே பிரதமர் கார்னி தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தால் வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை மேற்கோள் காட்டி, வரிகள் ஒவ்வொரு அமெரிக்கரையும் காயப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்திற்கு உடனடியாக பதிலளித்த ட்ரம்ப், அந்த விளம்பரம் போலியானது மற்றும் மிகவும் மோசமானது என குறிப்பிட்டுள்லதுடன், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் உடனையே கைவிடப்படுவதாகவும் அறிவித்தார்.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் 35 சதவீதம் வரி விதித்துள்ளது. அத்துடன் கார் மற்றும் எஃகு உற்பத்தி போன்ற குறிப்பிட்ட தொழில்களை குறிவைத்து தனிப்பட்ட வரிகளையும் விதித்துள்ளது.
ட்ரம்பின் இந்த வரிகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணம் ஒன்ராறியோ. மெக்சிகோ மற்றும் கனடாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்களுக்கு ட்ரம்ப் விலக்குகளை அனுமதித்தார்.
ஒப்பந்தம்
ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததிலிருந்து, கனடா பிரதமர் கார்னி வரிகளைக் குறைக்கும் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க முயன்று வந்துள்ளார்.

உண்மையில், கனேடிய ஏற்றுமதிகளில் முக்கால்வாசி அமெரிக்காவிற்கு செல்கிறது, இதனால் அதன் பொருளாதாரம் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. இந்த நிலையில், பிரதமர் கார்னி வெளியிட்ட கருத்துக்களில் விளம்பரத்தைப் பற்றிப் பேசவில்லை.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கனடா பல வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆசியா உட்பட பிற நாடுகளுடன் புதிய கூட்டணியை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |