எளிதில் வீடு வாங்குவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் கனடா... இலங்கை எங்கே உள்ளது தெரியுமா?
ஒருபக்கம் கனடா ரியல் எஸ்டேட் விண்ணைத்தொடும் அளவுக்கு விலைவாசி கொண்டது என கூறப்படும் நிலையில், மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது கனடா, வீடு வாங்குவதற்கு உகந்த சிறந்த நாடுகளில் ஒன்றாகத்தான் திகழ்கிறது.
பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்ட கட்டுமானப் பொருட்கள் விநியோகஸ்தரான Roofing Megastore என்ற அமைப்பு, வீடு வாங்குவதற்கு உகந்த சிறந்த நாடுகள் பட்டியலில், கனடாவுக்கு 14ஆவது இடத்தைக் கொடுத்துள்ளது. அதாவது எந்த நாட்டில் சொந்த வீடு வாங்குவது எளிது என்ற பட்டியல்.
அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்வீடன், இத்தாலி மற்றும் பிரித்தானியா முதலான நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, எளிதாக வீடு வாங்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது கனடா.
ஒரு நாட்டில் வழங்கப்படும் மாத வருவாய் மற்றும் வீட்டின் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு நோக்கும்போது, எளிதில் வீடு வாங்க இயலும் நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது சவுதி அரேபியா. அதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, பியூர்ட்டோரிக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.
உலகில் எந்த நாட்டில் வீடு வாங்குவது கஷ்டம் என்ற ஒரு பட்டியலும் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அந்த பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது கானா, அடுத்ததாக, இலங்கை, அதைத் தொடர்ந்து, ஹொங்ஹொங், ஜமைக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.