Omicron கொரோனா பரவலைத் தொடர்ந்து கனடா விதித்துள்ள புதிய பயணக் கட்டுப்பாடுகள்
Omicron வகை மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கனேடிய அதிகாரிகள் பயணக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளார்கள்.
இந்த புதிய கட்டுப்பாடுகளால் யாருக்கெல்லாம் பாதிப்பு என இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்...
இந்த புதிய கட்டுப்பாடுகளால், 10 ஆப்பிரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவையாவன, போட்ஸ்வானா, எகிப்து, Eswatini, Lesotho, Malawi, Mozambique, நமீபியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாபே.
கடந்த 14 நாட்களில், இந்த நாடுகளில் எந்த நாட்டுக்காவது சென்று திரும்பிய வெளிநாட்டவர்கள் யாரும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்த கட்டுப்பாடுகள், மேற்கூறப்பட்ட நாடுகளுக்கு சென்று திரும்பும் கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்களையும் பாதித்துள்ளது. அப்படி அந்த நாடுகளுக்குச் சென்று கனடா திரும்புவோர் மூன்றாம் நாடு ஒன்றில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். தற்போது, கனேடியர்கள் தென்னாப்பிரிக்காவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
மேலும், முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் தவிர்த்து மற்ற நாடுகளிலிருந்து திரும்புவோர், கனடாவுக்குள் நுழைந்ததும் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்படுவதையும், தனிமைப்படுத்தலையும் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது கனடா.
ஆகவே, கனடாவுக்கு பயணம் புறப்படுவோர், பயணத்திற்காக திட்டமிடும்போதே, புதிய விதிகளை கவனித்து திட்டமிடுதல் நலம்.
கனடா போக்குவரத்துத்துறை அமைச்சர், கனடா புறப்படுபவர்களுக்காக புதிய கட்டுப்பாடுகள் குறித்து சில பயனுள்ள விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
அவையாவன,
நீங்கள் கனடாவுக்கு புறப்படும் முன்,
கனேடிய அரசின் இணையதளம் எந்தெந்த நாட்டவர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விவரத்தைக் கொண்டுள்ளது. அதை பயன்படுத்திக்கொள்வது பயனளிக்கலாம். ஆனாலும், எல்லை அதிகாரி மட்டுமே நீங்கள் கனடாவுக்கு பயணிக்கலாமா கூடாதா என்பதை முடிவு செய்வார் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
நீங்கள் தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, பெறாவிட்டாலும் சரி, எல்லை அதிகாரி, நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்ய வாய்ப்பு உள்ளதால், நீங்கள் உங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான திட்டத்தைக் கைவசம் வைத்திருக்கவேண்டும்.
ஐந்து வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய அனைத்துப் பயணிகளும் பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை கனடாவுக்குள் நுழையும் முன் சமர்ப்பிக்கவேண்டும்.
நீங்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றவர் என்பது அங்கீகரிப்பட, கீழ்க்கண்ட தடுப்பூசிகளில் ஒன்றையோ அல்லது இரண்டைக் கலந்தோ, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பெற்றிருக்கவேண்டும்.
- பைசர் (Comirnaty, tozinameran, BNT162b2)
- மொடெர்னா (Spikevax, mRNA-1273)
- ஆஸ்ட்ராசெனகா (Vaxzevria, COVISHIELD, ChAdOx1-S, AZD1222)
- ஜான்சன் அண்ட் ஜான்சன் (Ad26.COV2.S)
- பாரத் பையோடெக் (Covaxin, BBV152 A, B, C)
- Sinopharm BIBP (BBIBP-CorV)
- Sinovac (CoronaVac, PiCoVacc)
பயணிகள் தங்கள் ஆவணங்களை ArriveCAN ஆப் அல்லது இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்திருக்கவேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள 10 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கனடா திரும்புவோருக்கான விதிமுறைகள்
பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி பெற்ற கனேடிய பயணிகள், கனடா வந்ததும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்குட்பட வேண்டும்.
பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்படும் பயணிகள் தங்கள் வீட்டிலோ அல்லது தனிமைப்படுத்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திலோ தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
கொரோனா தொற்று இல்லையென்றாலும், அவர்கள் தங்கள் வீடுகளில் அல்லது தனிமைப்படுத்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திலோ தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிவரலாம். அத்துடன், 8ஆவது நாள் கொரோனா பரிசோதனையையும் அவர்கள் செய்துகொள்ளவேண்டும். அந்த பரிசோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தால், அவர்கள் 14ஆவது நாள் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேறலாம். கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், மேலும் 10 நாட்களுக்கு அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி பெறாத பயணிகளுக்கும் இதே கட்டுப்பாடுகள்தான்.
மற்ற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் (அமெரிக்கா தவிர்த்து)
அமெரிக்கா தவிர்த்து (பாதிக்கப்பட்ட 10 ஆப்பிரிக்க நாடுகளலாத) மற்ற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி பெற்ற பயணிகள், கனடாவுக்குள் வந்ததும் ஒரு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அந்த பரிசோதனையின் முடிவுகள் வரும்வரையில், அவர்கள் தங்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தால், அவர்கள் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேறலாம். கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால் மேலும் 10 நாட்களுக்கு அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
மற்ற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி பெறாத பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் (அமெரிக்கா தவிர்த்து)
கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் தடுப்பூசி பெறாத பயணிகளுக்கும், தடை செய்யப்பட்ட நாடுகளிலிருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள அதே விதிகள்தான்.
அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களது பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தாலும், அவர்கள் தனிமைப்படுத்தல் நாட்களை முழுமையாக முடிக்கவேண்டும், 8ஆவது நாள் பரிசோதனையையும் செய்துகொள்ளவேண்டும்.
கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், மேலும் 10 நாட்களுக்கு அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.