கனடிய தொழிலதிபருக்கு 11 ஆண்டுச் சிறை விதித்த சீனா!
கனடாவைச் சேர்ந்த மைக்கேல் ஸ்பேவர் (Michael Spavor) என்பவருக்கு உளவு பார்த்த குற்றத்துக்காகச் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சீன நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.
மற்றொரு கனேடிய நாட்டவரான Robert Lloyd Schellenberg-க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சீனாவில் உறுதி செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த வளர்ச்சி ஏற்பட்டது.
சீனாவின் டான்டோங் நகரில் உள்ள நீதிமன்றம் ஸ்பேவரை உளவு பார்த்ததாகவும், சட்டவிரோதமாக மாநில ரகசியங்களை மற்ற நாடுகளுக்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டியது. அவரது 11 ஆண்டு சிறைத்தண்டனை முடிந்ததும் அவரை சீனாவில் இருந்து நாடு கடத்த உத்தரவிடப்பட்டது.
தொழிலதிபரான ஸ்பேவர் மற்றும் கனடாவின் முன்னாள் அரசதந்திரி மைக்கேல் கோவ்ரிக் (Michael Kovrig) இருவரும் 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இந்தத் தீர்ப்புக் கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்கனவே சிக்கலில் இருக்கும் உறவை மேலும் பாதிக்கும்.
கனடாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஹுவாவேய் நிறுவனத்தின் மூத்த அதிகாரி மெங் வான்சோவ்வை (Meng Wanzhou) நாடு திரும்பவைக்கச் சீனா பெரும் முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், ஸ்பேவரையும் கோவரிக்கையும் சீனா அரசியல் பேரம் பேசப் பயன்படுத்துகிறது என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஸ்பேவர் எப்போது நாடு கடத்தப்படுவார் என்று குற்ற அறிக்கை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், பொதுவாகச் சீனா தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரை சிறைத்தண்டனைக் காலம் முழுமையாக முடிந்த பின்னரே திருப்பி அனுப்பும்.
சீனாவுக்கானக் கனடியத் தூதர் தண்டனைக்குக் கண்டனம் தெரிவித்தார்.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.