வெளிநாடு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர் முதலான கனேடிய விமானப் பணியாளர்களின் பயங்கர அனுபவம்
டொமினிக்கன் குடியரசில் இருந்து கனடா செல்லும் விமானம் ஒன்றில் சந்தேகத்துக்குரிய விதத்தில் இருந்த பார்சல் குறித்து அந்த விமான ஊழியர்கள் அந்நாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்கள்.
தகவல் கொடுத்தவர்களையே சிறையிலடைத்த அதிகாரிகள்
விமான ஊழியர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, டொமினிக்கன் குடியரசிலுள்ள Punta Cana என்ற இடத்திலிருந்து கனடாவின் ரொரன்றோவிற்குப் புறப்பட இருந்த அந்த பார்சலை அந்நாட்டு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளார்கள்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த பார்சலுக்குள் 200 பொட்டலங்களில் கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருந்துள்ளது. உடனடியாக, டொமினிக்கன் குடியரசு அதிகாரிகள், தகவல் கொடுத்த அந்த விமான ஊழியர்களையே கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
அவர்களில் ஒருவர் இந்தியர், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்தவர் ஒருவர், மற்றும், கனேடியர்கள் ஒன்பது பேர். இந்த சம்பவம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நடந்துள்ளது.
(Unifor/YouTube)
அந்த விமான ஊழியர்களுக்கும் அந்த போதைப்பொருளுக்கும் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகித்ததால், அவர்களை மோசமாக நடத்தியுள்ளார்கள், கொன்றுவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள்.
அவர்களை சிறையிலடைத்து, சிறை அறைக்கு வெளியே ஒரு சடலத்தைப் போட்டு, அடுத்தது நீங்கள்தான் என மிரட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன.
அனைவரும் மீட்பு
இந்நிலையில், ஏழு மாதங்களுக்கும் மேலாக டொமினிக்கன் குடியரசிலிருந்த அந்த ஊழியர்கள் அனைவரும் தற்போது கனேடிய அதிகாரிகள் பலருடைய தீவிர முயற்சியின் காரணமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
வியாழக்கிழமையன்று, அவர்களனைவரும் பத்திரமாக ரொரன்றோ வந்து சேர்ந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. என்றாலும், அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தாரையும் இந்த மோசமான அனுபவம் கடுமையாக பாதித்துள்ளது.
போதைப்பொருளைக் கண்டுபிடித்துக் கொடுத்ததால் ஹீரோ போல நடத்தப்படுவோம் என எண்ணியிருந்தவர்கள், மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்டதால் அவர்கள் கடும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.