பழிக்குப்பழி வாங்கத்தான் கனேடிய தூதரை வெளியேற்றினோம்... மனம் திறந்த இந்திய உயர் ஸ்தானிகர்
பழிக்குப்பழி வாங்கத்தான் கனேடிய தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்றினோம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர்.
உணர்ச்சிப் பெருக்கில் எடுத்த முடிவு அது...
நீண்ட காலமாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் நட்பு நீடித்து வருவதாக ஒரு தோற்றம் இருந்துவந்த ஒரு காலகட்டதில், திடீரென ஒரு நாள், இந்தியா மீது பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை கூறினார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
கனேடிய மண்ணில், கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்ட, ஒரே நாளில் சூழ்நிலை மாறிப்போனது.
கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை கனடா வெளியேற்ற, பதிலுக்கு, கனேடிய தூதர் ஒருவரை இந்தியா வெளியேற்றியது.
அது பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்று தற்போது தெரிவித்துள்ளார் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகரான சஞ்சய் குமார் வர்மா.
அது உணர்ச்சிப் பெருக்கில் இருந்த ஒரு காலகட்டம் என்று கூறிய வர்மா, இந்திய தூதர் ஒருவரை கனடா வெளியேற்றியதால், பதிலுக்கு கனேடிய தூதரை இந்தியா வெளியேற்றியதாகவும், அது உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான் என்றும் கூறியுள்ளார்.
நிச்சயமாக, உறுதியாக நிஜ்ஜர் கொலையில் இந்தியாவின் பங்கு இல்லை
நிஜ்ஜர் கொலை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த வர்மா, நிஜ்ஜர் கொலையில், நிச்சயமாக, உறுதியாக இந்தியாவுக்கு பங்கு இல்லை என்று கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த வர்மா, நிச்சயமாக முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியதுடன், இரண்டு மாதங்களுக்கு முன் இருந்ததைவிட, தற்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |